லஞ்சம் தவிர்த்து..!

நெஞ்சம் நிமிர்த்து..!

 

சங்கம் வளர்த்த பழம்பெரும் கலை நயத்துடன், பார் போற்றும் பாரம்பரியத்துடன், அழகான ஒரு நகரம் மதுரை நகரம், அங்கே ஆட்சியராய் பணிபுரிந்த காலங்களிலே, அடித்தட்டு மக்களையும் எண்ணித் துயருற்றவர்.

"தமிழன் என்று சொல்லடா.!
தலை நிமிர்ந்து நில்லடா.!"

என வாழ்ந்த தமிழன் பல நிலைகளிலுல் தாழ்ந்து இருப்பது கண்டு வருந்தினார் நம் ஐயா திரு உ.சகாயம் இ.ஆ.ப

நம் தாய்த்தமிழ் நாட்டின் நிலை கண்டு,வெட்கித் தலை குனிந்த,நம் இளைஞர்கள் ஒன்று கூடி,சகாயம் அய்யா தலைமையில் ஓர் மாற்றம் தர விரும்பினர்.

நாளும் பொழுதும் நல்லோர் அறிவுரைகளுடன், சிந்தித்து எடுத்த முடிவே சகாயம் ஐயாவை நம்மை வழி நடத்திட அழைக்க வேண்டும் என்பது.

அந்த தூண்டலின் படி செயல் திட்டம் வகுத்து தமிழகத்தின் தலைநகரமாம் சிங்காரச் சென்னையில் உள்ள ஆா்.ஆா்.மைதானம், எழும்பூரில் 20/12/2015 அன்று மிக பெரிய ஓர் பேரணி நடத்தினர். அதில் ஆண்களும், பெண்களும் பெரியோர்கள் முதல் சிறியவர் வரை கண்ணில் ஒரு ஏக்கத்தையும் நெஞ்சில் தமிழகத்தை மீட்டு எடுக்கவும் கிளம்பி விட்டனர் வீர தமிழகமக்கள்.

"சென்னைப் பேரணி" சகாயம் 2016 தந்த வெற்றிக் களிப்பில் மதுரையில் மாநாடு நடத்திட எண்ணினர்.

பாசத்திற்கும், பக்திக்கும் குறைவற்ற மதுரையில் குதூகலம் பிறந்தது. மாநாட்டுப்பந்தல் அமைக்கும் போதே மகிழ்ந்தனர் மக்கள். ஐயாவின் நேர்மையை நேசிக்கும் பலரும் ஓடி வந்து உழைக்க, இனிதே வந்தது அந்த நாள் 3.1.2016 ஆம் அன்று தான் மாற்றம் வேண்டி, பல மாமன்னர்கள் ஆட்சி செய்த மதுரையில் உள்ள மாநாட்டுதிடல், வட்டச்சாலை (ரிங்ரோடு), வண்டியூரில், அலைகடலென திரண்டது மக்கள் கூட்டம். பல நல்லோர் நிறைந்த மேடையில் மகிழ்வுடன் ஏறிய எங்கள் இளைஞர் படை.

"இனியொரு இனியொரு விதி செய்வோம்"
"தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம்"

என்ற இடி முழக்கமிட்டது.

தோள்கள் உயர்த்தி, செவிப்பறை கிழிய எம் இளைஞர் கூட்டம் சகாயம் அய்யாவை அழைத்தது. மக்களின் துயர் நீக்க,ஒரு தூயவன் வேண்டி, "எழுச்சி தமிழகம்" பிறந்தது.

எழுச்சி தமிழகம் ஒவ்வொரு இளைஞனையும் தூங்க விடாமல் செய்தது. "எழுச்சிதமிழகம்" தந்த வெற்றிக் களிப்பில், அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்த எம் இளைஞர்களை இனம் கண்டு கொண்ட சகாயம் ஐயா "மக்கள் பாதை" என்று ஓர் மாற்றுப்பாதை உருவாக்கி, எங்களோடு இணைந்தார்.

இனி,

தமிழ் வெல்லும்..!
தமிழர் வாழ்வு செழிக்கும்..!

இறுமாப்புடன் "மக்கள் பாதை" யில் நம் மக்கள் பயணம் தொடரட்டும்.

அன்று காமராசரும், கக்கனும், திருப்பூர் குமரனும், தில்லையாடி வள்ளியம்மையும் தமிழராய் சாதித்த சாதனைகள் எத்தனை எத்தனை?.

இன்று தாய்நாட்டை ஆள ஒரு தமிழ்மகன் இல்லையே.!
அவன் வழி செல்ல ஒரு இளைஞர் படை இல்லையே.!

என்ற ஏக்கம் தணிந்தது. மாற்றத்தை நோக்கி நாங்கள் நடக்கின்றோம். "மக்கள் பாதை" யில் எம் நாயகன் துணையுடன்.

துணிவே துணை..!
வாருங்கள் தமிழ் மக்களே..!